உலோகங்கள் மற்றும் பொருட்கள் அரிமான தடுப்புத்துறை - கண்ணோட்டம்

உலோக அரிமானம் என்பது இயற்கையாகவே நிகழும் ஒரு செயல். அரிமானமானது ஒரு பொருள் அது இருக்கும் சுற்றுச் சூழலுடன் வினை புரிவதால் அதன் பண்புகள் மற்றும் வலிமைத்தன்மையை குறைவடையைச் செய்கிறது. உதாரணமாக இரும்பு வளி மண்டலதிலுள்ள காற்று, நீர்த்துளிகள் மற்றும் மாசுக்களுடன் வினை புரிவதால் உலோக அரிமான விளைபொருளான துரு அதன் மீது உருவாகிறது.


உலோக அரிமானம் பொருட்களின் வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைய வைக்கின்றது. இதனை நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் காணமுடியும். சிக்ரியின் உலோக அரிமான தடுப்புத்துறை உலோக அரிமானத்தின் பல்வேறு அம்சங்களை அறிந்து கொள்வதிலும் மற்றும் அதனை தடுக்கும் முறைகளை கண்டறிவதிலும் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறது. இத்துறையில் கட்டமைப்பு, பொருட்களின் வலிமை குறைவினால் ஏற்படும் பழுதடைவு ஆய்வுகள், உயிரியல் / நுண்ணுயிரியல் அரிமானம், கட்டுமானதுறையில் ஏற்படும் உலோக அரிமானம், உலோக அரிமானத் தடுப்பு வண்ணப்பூச்சுக்கள் மற்றும் வண்ணக் கலவைகள், எதிர்மின்வாய்ப் பாதுகாப்பு மற்றும் உலோக அரிமானக் குறைப்பான்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தின் அரிமானத் தடுப்புத் துறை அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு உந்து சக்தியாகவே அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏனெனில் தொழில் துறையில் இப்பிரிவின் தாக்கம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. மேலும் இத்துறை சார்ந்த ஆராய்ச்சியில் மத்திய மின் வேதியியல் ஆய்வகம் முக்கிய பங்கு வகிக்கின்றது. பல அரிமானத் தடுப்பு தயாரிப்புகள் மற்றும் செயல்முறைகளின் வளர்ச்சிக்கு இத்துறை வழி வகுத்துள்ளது.


நம் நாட்டில் முதன்முறையாக பாலங்கள் மற்றும் கான்கிரீட் கட்டிடங்களின் வலிமை மற்றும் ஆயுளைக் கண்காணிக்க பல்வேறு தொழில் நுட்பக் கருவிகள் மற்றும் நுண்ணறிவான்கள் இத்துறையைச் சார்ந்த வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு மேலும் பயன்பாட்டில் உள்ளது.


அணு உலைகளின் கான்கிரீட் கட்டமைப்பின் வலிமையைக் கண்காணித்தல்,  உலோக அரிமானத்தை எதிர்க்கவல்ல கான்கிரீட்,  நேர்மின்வாய், எதிர்மின்வாய் மற்றும் இரண்டும் கலந்த உலோக அரிமானக் குறைப்பான்கள், உணர்வான்கள் மூலம் கான்கிரீட்டிலுள்ள இரும்புக் கம்பிகளின் அரிமானத்தை கண்டறிந்து அதற்கு மறுவாழ்வு அளித்தல் போன்ற பல்வேறு வகையான ஆய்வுகளில் எங்கள் பங்களிப்பு முக்கியமானது. இந்த ஆய்வுகளால் தண்ணீர் ஒட்டாத சிறந்த பாதுகாப்பு தரும் வண்ணப்  பூச்சுக்கள்,  தன் மேற்பரப்பிலுள்ள குறைகளை தானே சரி செய்து கொள்ளும் உலோக அரிமான வண்ணப்பூச்சுக்கள் மற்றும் முதற்பூச்சு தொழில் நுட்பங்கள் போன்றவை பல்வேறு மேம்பாடுகள் அடைந்துள்ளன. கடல் மற்றும் நிலத்தடி  கட்டமைப்புகளில் எதிர்மின்வாய் பாதுகாப்பு என்பது ஒரு முக்கியமான ஆராய்ச்சியாகும்.


இவ்வாராய்ச்சியில் பல்வேறு தொழில் நுட்பங்கள் எங்கள் வல்லுநர் குழுக்களால் வடிவமைத்து உருவாக்கப்பட்டு மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளில் செயல்பாட்டில்  உள்ளது.


 இந்தியாவின் புதுப்பித்த உலோக அரிமான வரைபடத்தை தீவிர ஆராய்ச்சி மற்றும் புள்ளியியல் கணக்கிடல் முறை மூலம் இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்திய எங்கள் ஆய்வகத்தின் உலோக அரிமானத்துறையின் பங்கு மிகுந்த பாராட்டுக்கும் பயன்பாட்டுக்கும் உரியது. இதுபோன்ற திட்டமிட்ட வரைபடங்கள் நம்நாட்டிலுள்ள தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வளிமண்டல உலோக அரிமான பண்புகளை நமது நாட்டின் பல சோதனைத் திடல்களில் குறிப்பாக பெரும்பாலான கடற்கரையோர நகரங்களில் உலோகங்கள் எந்த விகிதத்தில் உலோக அரிமானம் அடைகிறது என்பதை விளக்குகிறது. எங்கள் ஆய்வகத்தின் அரிமானத் தடுப்புத் துறை உலோக அரிமான இழப்பைக்  குறைப்பதற்கு  பல்வேறு நிறுவனங்களுக்கு உலோக அரிமான தணிக்கை அறிக்கை மற்றும் உலோக அரிமானத் தடுப்பு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.


உலோக அரிமான ஆராய்ச்சியில் எங்களது தொலைநோக்குப் பார்வை:

  • உலோக அரிமானத்தில் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்

  • தொழிற்சாலைகளுக்குத் தேவையான உலோக அரிமானத் தடுப்பு ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் போன்ற சேவைகளை வழங்குவது

  • புதுமையான உலோக அரிமானம் கண்டறியும் மற்றும் தடுக்கும் தொழில் நுட்பங்களை உருவாக்குதல்.

  • புதுவகையான உலோகங்கள் மற்றும் உலோகம் அல்லாத பொருட்களை உருவாக்குதல், சோதனைப்படுத்துதல் மேலும் அவற்றின் உலோக அரிமான பண்புகளை ஆராய்தல்.

  • உலோக அரிமானம் மற்றும் பயன்பாட்டு பொருட்களின் வலிமைக் குறைவால் ஏற்படும் பழுதுகள் மற்றும் விபத்துகளை திறம்பட ஆராய்ந்து தீர்வு காணுதல்.

  •  உலோக அரிமான தொழில் நுட்பத்தில் புதுவகையான நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்துதல்.

  •  உலோக அரிமான ஆய்வுகளில் அதிநவீன மேற்பரப்பு பகுப்பாய்வு தொழில் நுட்பங்களை பயன்படுத்துதல்.


தொழில்நுட்பம் சார்ந்த ஒரு சமூகத்தை நோக்கி நாம் செல்லும்போது அரிமானம் தொடர்பான நிகழ்வுகளைப் பற்றிய நமது விழிப்புணர்வும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எளிதில் கிடைக்கக் கூடிய அனைத்துக் கருவிகள் மற்றும் வழி முறைகள் வாயிலாக அரிமானத்தைப் புரிந்து கொள்ளுவதில் நாம் தொடர்ந்து வளர்ந்து வருகிறோம்.