உலோக அரிமான சோதனை மையம்:  மண்டபம் - கண்ணோட்டம்

சி.இ.சி.ஆர்.ஐ - யின் உலோக அரிமான சோதனை மையம் 1975 ல் இருந்து செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக சி.இ.சி.ஆர்.ஐ - யின் உலோக அரிமான சோதனைத் திடல், மண்டபத்தில் உள்ள மத்திய மின் ஆராய்ச்சிக் கழகத்தின் சிறு குன்றில் அமைந்த கடற்கரையோரப் பகுதியில் 1965 - ல் இருந்து செயல்பட்டு வந்தது. தற்போது அமைந்துள்ள மையத்தின் சோதனைத்திடல் மன்னார் வளைகுடாவின் கடற்கரை ஓரத்தில் கடல் மட்டத்திலிருந்து 3 மீட்டர் உயரத்திலும் கடற்கரையில் இருந்து 30 மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. மண்டபம் மன்னார் வளைகுடா கடற்கரைப் பகுதியானது கடல் சார்ந்த சீதோஷ்ண வெப்ப மண்டலமாகும். இந்த கடற்கரைப் பகுதியானது தட்டையான நிலப்பரப்பு, அங்கு நிகழும் பருவ நிலைகள், கடலின் மேற்பரப்பில் இருந்து அதி வேகத்துடன் நுண்ணிய கடல்நீர்த் துளிகளை ஏந்தி வரும் கடற்காற்று, காற்றில் உள்ள ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் போன்ற காரணிகள், மண்டபத்தில் வளிமண்டல உலோக அரிமான சோதனை மையம் அமைவதற்கு முக்கிய காரணமாகும்.

மேற்கூறிய காரணங்களால் சி.இ.சி.ஆர்.ஐ - யின் மண்டபத்தில் உள்ள உலோக அரிமான சோதனைத் திடல் உலகிலேயே அதிகமாக வளிமண்டல உலோக அரிமானம் அடையும் இடமாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சோதனை மையத்தில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பல்கேரியா போன்ற பல நாடுகள் சி.இ.சி.ஆர்.ஐ - யுடன் கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு பல்வேறுவகையான உலோகங்கள், உலோக கலவைகள், கான்கிரீட் கலவைகள், மின்சார / மின்னணுப் பொருட்கள் மேலும் பல்வேறு வகையான வண்ணப்பூச்சுக்கள் போன்றவற்றின் செயல்திறன் சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. ஆதலால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட உலோகங்கள், உலோகக் கலவைகள், உலோகம் அல்லாத பொருட்கள் மற்றும் வண்ணப்பூச்சுக்கலவைகள் போன்றவை பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னர் இச்சோதனைத் திடலில் அவற்றின் செயல்திறனை கண்டறிவது முக்கியம் என்று கருதப்படுகின்றது.


இதனால் உலகளவிலும் / தேசிய அளவிலும், ஏராளமான தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், ஆராய்ச்சிக்கூடங்கள் மற்றும் வண்ணப்பூச்சு / உயிரினங்கள் ஒட்டாத வண்ணப்பூச்சுகள் தயாரிக்கும் நிறுவனங்கள் போன்றவை உற்பத்தி செய்யும் பொருட்களின் செயல்திறனை இச்சோதனை மையத்தில் கண்டறிவதில் ஆர்வம் காட்டுகின்றன.

மேலும், இவ்வாராய்ச்சி மையத்தில் கடல்நீரில் பொருட்கள் எவ்வாறு உலோக அரிமானம் அடைகிறது என்பதைப் பற்றிய விரிவான ஆராய்ச்சியும் செய்யப்படுகின்றது. உலோகங்கள் மற்றும் பொறியியல் துறையில் பயன்படுத்தப்படும் உலோகக் கலவைகள் கடலில் பயன்படுத்தும் பொழுது எவ்வாறு உலோக அரிமானம் அடைகிறது மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் அதன்மீது ஒட்டுவதால் அதன் பண்புகள் எவ்வாறு சீர்குலைகின்றது என்பதைப் பற்றிய நீண்ட கால ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதனால் இந்திய கடற்கரை நீரில் பொருட்களின் செயல்திறனைப் பற்றிய அரிய மற்றும் மிகவும் இன்றியமையாத தகவல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது இவ்வாய்வகத்தில் கடல் நீரில் மூழ்கியுள்ள ஓர் உலோகத்தில் ஒளியூட்டுதல் மூலமாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் செறிவூட்டப்பட்ட உலோக அரிமானம் அடைவதை கட்டுப்படுத்துவது பற்றிய ஆய்வு நடைபெற்று வருகிறது. இவ்வாராய்ச்சியில் கடல் நீரில் பயன்பாட்டிலுள்ள துருப்பிடிக்காத இரும்பின் உலோக அரிமான எதிர்ப்புத் தன்மையை 10 % ஊடுருவும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி அதிகரிக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதே அளவு சூரிய ஒளியைப் பயன்படுத்தி கடல் நீரில் மூழ்கியுள்ள துருப்பிடிக்காத இரும்பின் மீது கால்சியம் செறிவுமிக்க படலம் படிதல் மற்றும் எதிர்மின்வாய் பாதுகாப்பு முறையின் செயல்திறன் அதிகரித்துள்ளது என்பதையும் கண்டறிந்துள்ளோம். இந்த ஆய்வின் முடிவுகள் கடல் நீரில் மூழ்கியுள்ள உலோகத்தின் அரிமான எதிர்ப்புத் தன்மையை ஒளியூட்டுதல் மூலமாக அடையும் முறையைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது.