சி.எஸ்.ஐ.ஆர்- சி.இ.சி.ஆர்.ஐ. பற்றி


சி.எஸ்.ஐ.ஆர் - சி.இ.சி.ஆர்.ஐ.பற்றி


தமிழ் நாட்டில் தொன்மையும், பண்பாடும் வாய்ந்த தென் மாவட்டங்களில் ஒன்றான சிவகங்கையில், காரைக்குடி ஒரு சிறு நகரமாகும். இச்சிற்றூர் 1948 ம் ஆண்டு ஜூலை மாதம் 25ம் நாள் அன்று பண்டிகைப் பொலிவுடன் விழாக்கோலம் பூண்டது. திரளான மக்கள் (சுமார் ஒரு லட்சம் பேர்) முன்னிலையில் இந்திய அறிவியலில் ஒரு மைல் கல்லாக (milestone) அன்றைய தினம் மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த ஆய்வகம் இங்கு வருவதற்கு முழுமுதற் காரணமாகத் திகழ்ந்தவர் மதிப்பு மிக்க வள்ளல் முனைவர் RM. அழகப்பச் செட்டியார் அவர்கள். மின் வேதியியலில் பிரத்தியேக ஆராய்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த தேசிய ஆய்வகத்தை நிறுவுவதற்காக, வள்ளல் குணம் படைத்த மண்ணின் மைந்தர் முனைவர் RM அழகப்ப செட்டியார் அவர்களின் தனிப்பட்ட முயற்சியேயாகும். இதற்காக வள்ளல் அவர்கள் தனக்குச் சொந்தமான 300 ஏக்கர் நிலத்தையும், ரூபாய் 15.00 லட்சம் ரொக்கமும் 1948ம் ஆண்டு நன்கொடையாக வழங்கினார். அப்போதைய இந்திய பிரதமர் மாண்புமிகு பண்டித ஜவஹர்லால் நேரு இந்நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டி துவக்கிவைத்தார். இவ்விழாவில் முனைவர் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதன் இயல் வடிவம் 1953ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி அன்று, அப்போதைய இந்தியக் குடியரசு தலைவர் முனைவர் மேதகு சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் இந்திய நாட்டின் 12வது ஆய்வகமாக மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக்குழுமத்தின் கீழ் நாட்டுக்கு அர்ப்பணித்தார்கள். தனது அடிக்கல் நாட்டு விழா உரையில், பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் “இத்தகைய நிறுவனங்கள் மூலம் அறிவியல், சமூகத்திற்கு பயன்பெறும் வகையில் அமையும் என்றும் இந்திய மக்கள் பெருமளவில் முன்னேற்றம் அடைய முடியும் என்று நம்புகிறேன்" என்றுரைத்தார்.

இன்று சி.எஸ்.ஐ.ஆர். – மத்திய மின்வேதியியல் ஆய்வகம் ஒரு பெருமை மிக்க நிறுவனமாக, அதாவது 100 விஞ்ஞானிகள், சுமார் 175 பிற ஆராய்ச்சி மற்றும் நிர்வாகப் பணியாளர்கள், மற்றும் 100 ஆராய்ச்சி மாணவர்களுடன் தெற்காசியவில் மின்வேதியியலில் மிகப் பெரிய ஆய்வகமாகத் திகழ்கிறது. இந்தியாவில் மின்வேதியியலில் பல்வேறு தொழில் நுட்பங்களுக்கான துவக்கத் தளமாக திகழ்வதுடன், ஏறத்தாழ 750 காப்புரிமைகள் மற்றும் 6500 மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை பல்வேறு உலகத்தரம் வாய்ந்த ஆய்வு இதழ்களில் வெளியிட்டுள்ளது. மேலும், 250 செயல்முறைகள், 600 நிதி உதவி மற்றும் மானியத் திட்டங்கள், 450 தொழில் தொடங்க உரிமங்கள் ஆகியவைகளை இந்த தேசத்திற்கு வழங்கியதுடன், தேசத்தின் அறிவியல் வரைபடத்தில் ஒரு மைல் கல்லாகவும் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

காரைக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள சி.எஸ்.ஐ.ஆர். – மத்திய மின்வேதியியல் ஆய்வகம் தனது விரிவாக்க ஆய்வு மையங்களை சென்னை (மின்கலம்) மற்றும் மண்டபத்தில் (கடல்சார் அரிமாணம்) அமைக்கப்பெற்று அதன் பிரத்தியேக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வகமானது மின்வேதியியல் மற்றும் தொழில் நுட்பத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதுடன் மின் வேதியியல் ஆய்வின் மூலம் பல்வேறு ஆராய்ச்சி வினாக்களுக்கு விடைகாணும் விதமாக செயல்படுகிறது. தனது ஆராய்ச்சிகளில் முக்கியமாக அரிமான அறிவியல் மற்றும் பொறியியல், மின் வேதியியல் பொருட்கள், மின் வேதியியல் சக்தி மூலங்கள், மின் வேதியியல் மாசுக் கட்டுப்பாடு, அடிப்படை மின் பூச்சு, மீச்சிறு (நானோ) அளவிலான மின் வேதியியல், மின் கணிம/கரிம வேதியியல் ஆகிய துறைகளில் எதிர்கொள்ளும் தொழிற்சாலை பிரச்சினைகளை சரிசெய்யும் விதத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. புதிய மற்றும் மேம்பட்ட தயாரிப்புகள், செயல்முறைகள், மின் வேதியியல் தொழில் நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நோக்கில் சி.எஸ்.ஐ.ஆர்.- மத்திய மின் வேதியியல் ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. மேலும், உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு புகழ்பெற்ற ஆய்வகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்டுவருகிறது.

சி.எஸ்.ஐ.ஆர். மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சிகளை பெற்று சிறிய, பெரிய மற்றும் தனியார் தொழில் துறை கூடங்கள், அரசு சார்ந்த துறைகளான அணுசக்தி, பாதுகாப்பு சுற்றுசூழல், விண்வெளி, தரை போக்குவரத்து, கடல் மேம்பாடு ஆகியவை பயன்பெற்று வருகின்றன. இதைத் தவிர அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதோடு, கணக்கெடுப்புகளை (Survey) நடத்துவதன் மூலம் பல ஆலோசனை திட்டங்களை மேற்கொண்டு தொழில்துறைக்கு உதவுகிறது. மேலும் தொழில்சார் கூடங்கள், கல்வி நிறுவனங்கள் பயன்பாட்டிற்கு குறுகிய கால படிப்புகள் / திறன் மேம்பட்டுப் பயிற்சிகளை நடத்துகிறது. மேலும், மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய மின் வேதியியல் ஆய்வகம், சென்னை அண்ணா பல்கலைகழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனித்துவமான வேதியியல் மற்றும் மின் வேதிப்பொறியியல் (பி.டெக்) நான்கு வருட பட்டப் படிப்பை நடத்திவருகிறது. இவ்வாய்வகத்தில் உள்ள மிக சிறந்த நூலகம் மற்றும் அதிநவீன பகுப்பாய்வு கருவிகளின் பயன்பாட்டு வசதிகளை நம் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி நிறுவனங்கள், ஆய்வகங்கள் மற்றும் தொழில்கூடங்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் முனைவர் பட்டம் பெரும் மாணவர்கள் இந்த வசதிகளை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வாய்வகத்தில் ஆராய்ச்சி சங்கங்களான “மின்வேதி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு சங்கம்” (SAEST) மற்றும் “இந்திய தேசிய அரிமாணக் குழுமம்” (NCCI) ன் உதவியுடன் அறிவியல் அறிவை பரப்புவதற்காகவும், மின் வேதியியல் ஆய்வுகள் தொடர்பான கலந்துரையாடலுக்காகவும், மாநாடுகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் (தேசிய மற்றும் உலகளவில்) நிகழ்த்துவதற்காகவும் பல்வேறு ஆக்கப்பணிகளை செய்து வருகிறது. இதன்மூலம் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் அதிக அளவில் பயன்பெற்று வருகின்றனர். மேலும் சமூகக் கடமையுடன் தொழில் முனைவோர் மேம்பாடு, சி.எஸ்.ஐ.ஆரின் இளைஞர் மேம்பாட்டுத்திட்டம் போன்றவைகளில் மத்திய மின் வேதியியல் ஆய்வகம் தனது பெரும் பங்களிப்பை செய்துவருகிறது.

இதற்கெல்லாம் மகுடமாக சி.எஸ்.ஐ.ஆர். – மத்திய மின்வேதியியல் ஆய்வகம் இந்திய மற்றும் உலகளாவிய அறிவியல் தொழில்நுட்ப சேவைக்காக பல்வேறு பெருமை மிக்க விருதுகளைப் பெற்றுள்ளது.

 

http://rdpp.csir.res.in/csir_acsir/Home.aspx