மின்கரிம மற்றும் மின்வேதிப்பொருட்கள் துறை - கண்ணோட்டம்

மின்வேதியியற் தொகுப்பு முறையானது ஆக்ஸிஜனேற்றம், ஹைட்ரஜனேற்றம் மற்றும் செயல்பாட்டுக்கு தனித்துவமான தேர்ந்தெடுப்புடன் சுற்றுச்சூழலுக்கு உகந்ததொழில்நுட்பத்தை வழங்குகிறது. மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI, சிக்ரி) இந்த துறையில் பல ஆண்டுகளாக பல மின்-கரிம செயல்முறைகளை உருவாக்கியுள்ளது. அமினோ குவானிடைன் பைகார்பனேட், சமச்சீரற்ற டைமெத்தில் ஹைட்ரசின், கால்சியம் குளுக்கோனேட் மற்றும் பொட்டாசியம் அயோடேட் ஆகியவை வணிகமயமாக்கப்பட்ட சில செயல்முறைகளில் அடங்கும். கால்சியம் குளுக்கோனேட்டுக்கு மட்டும் சுமார் 12 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.


தற்போதைய தயாரிப்பு முறைகள் மற்றும் தொழில்துறை தேவைகளை பூர்த்தி செய்ய இருபது ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பங்களில் சில மேம்பாடுகள் தேவைப்படுகின்றன. மிகவும் தரமான, மேம்படுத்தப்பட்ட  நேர் மற்றும் எதிர் மின்முனை பொருட்கள் தற்போது கிடைக்கின்றன. நுண்ணிய பானை (porous pot) மற்றும் கல்நார் (asbestos) போன்ற சில பிரிப்பான்களை இப்போது அயனி பரிமாற்ற சவ்வுகள் மற்றும் பிற புதிய பிரிப்பான் பொருட்களால் மாற்றப்பட்டு உள்ளது. சுழலும் மின்முனைகள் மற்றும் தொகுதி மின்பகுப்பான்கள் குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தி திறன் கொண்ட ஓட்டம் மின்பகுப்பான்களால் (flow cells) மாற்றப்பட வேண்டும்.


இதுபோன்ற புதுப்பிக்கப்பட்ட நவீன ஓட்ட மின்பகுப்பான்கள் தற்போது வணிக ரீதியாக கிடைக்கின்றன. கால்சியம் குளுக்கோனேட் மற்றும் பொட்டாசியம் அயோடேட் போன்ற சில செயல்முறைகள் தற்போதும் தொழில் முனைவோர்களுக்கு தேவைப்படும் செயல்முறைகளாக உள்ளன மற்றும் அதற்கான வழிமுறைகளுக்காக தொழில்முனைவோர்கள் சிக்ரியை நாடுகின்றனர். தற்போதைய தேவைகளுக்கேற்ற வணிக ரீதியாக சாத்தியமான சில செயல்முறைகளைப் புதுப்பிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. நிதி உதவி மற்றும் வாடிக்கையாளர் ஆர்வம் கிடைக்கும் பட்சத்தில் இந்த மேம்படுத்தலை மேலும் துரிதப்படுத்தலாம்.


இத்துறையின் மின்வேதியியற் பொருட்கள் மீதான ஆராய்ச்சியானது ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பயன்பாடுகளுக்கான பல செயல்பாடு பண்புகள் உடைய பொருட்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றது. பலவகையான பயன்பாடுகளுக்கு பல்வேறு வகையான பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. அத்தகைய பொருட்கள் பின்வருமாறு: (i) ஒளி வினையூக்கம் மற்றும் ஒளிமின்னழுத்த பகுப்பாய்வு மூலம் சூரிய ஒளி ஆற்றலை எரிபொருளாக மாற்றுவது, சாய-உணர்திறன் மூலம் செயலாற்றும் சூரிய மின்கலங்களுக்கான (Dye-sensitized solar cells) நேர் மின்முனையாக செயலாற்றக்கூடிய பொருட்கள், (ii) ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் வெளியீடு, ஆக்ஸிஜன் குறைப்பு மற்றும் கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) குறைப்பு ஆகிய வினைகளுக்கான மின் வினையூக்கம், (iii) உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் குறிப்பிடத்தக்க சேர்மங்களைக் கண்டறிவதற்கான மின்வேதியியற் உணரிகள் (sensors), (iv) ஒளி உமிழ் இரு முனைய (LED) விளக்கு மற்றும் காட்சிச் சாதன பயன்பாடுகளுக்கான மாற்றக்கூடிய உமிழ்வு வண்ணங்களைக் கொண்ட ஒளிரும் பொருட்கள், மற்றும் (v) மின் மட்பாண்டங்கள் (Electroceramics) (மின்கடத்தா மின்காப்புப் பொருட்கள், அமுக்கமின் பொருட்கள் மற்றும் காந்த பொருட்கள்) மற்றும் மீத்திறன் மின்தேக்கிகள்.