ஐசிபி


பன்னாட்டு இணைவாக்கம் மற்றும் விளம்பரம் (ICP)

இவ்வாய்வகத்தின் முக்கியமானதொரு அங்கமாக விளங்கும், பன்னாட்டு இணைவாக்கம் மற்றும் விளம்பரப் பிரிவானது, ஆராய்ச்சித் தேவைக்காக விஞ்ஞானிகளின் வெளிநாட்டு தொடர்பு மற்றும் அவர்களின் மனிதவள மேம்பாடு குறித்த செயல்பாடுகளில் பெரும் பங்காற்றிவருகிறது.

குறிப்பாக விஞ்ஞானிகள், தொழில் நுட்ப அலுவலர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் வெளிநாட்டில் நடைபெறும் பன்னாட்டு மாநாடு, பயிற்சிப் பட்டறைகள் மற்றும் உயர்மட்ட ஆய்வுக் குழுக்களில் பங்கேற்பதற்கும், ஆய்வுக் கட்டுரைகளை வாய்வழி விளக்கக் காட்சி / சுவரொட்டி மூலம் நிகழ்த்தவும், பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழிலகங்களுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளவும் மற்றும் இவ்வாய்வகப் பிரதிநிதியாக அனுப்புதல் மற்றும் ஆய்வுப் பரிமாற்றம் செய்துகொள்வதற்கும் இப்பிரிவானது ஒரு மையப்புள்ளியாக செயல்படுகிறது (நோடல் பாயிண்ட்).


இதன் செயல்பாடுகள்

  • வெளிநாட்டு கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு விஞ்ஞானிகளை அனுப்ப அவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறுவது

  • விண்ணப்பங்களை அரசின் விதிமுறைகளின்படி ஆராய்ந்து தேர்வு செய்வது

  • தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்களை விஞ்ஞானிகள் குழுவிடம் பரிந்துரை பெறுவது

  • விஞ்ஞானிகள் குழுவின் பரிந்துரைப்படி, இயக்குனரிடம் ஒப்புதல் பெறுவது

  • ஒப்புதல் பெறப்பட்டு அதற்கான ஆணை நிர்வாக அலுவலகத்திடமிருந்து வழங்க ஏற்பாடு செய்தல் மற்றும்

  • வெளிநாடு சென்று திரும்பிய விஞ்ஞானிகளிடமிருந்து பயண விளக்கங்கள் மற்றும் ஆய்வு அறிக்கையைப் பெறுவது

போன்றவைகளாகும்.

ஆய்வு மாதிரிகள் சோதனை (Samples testing) மற்றும் மாணவர்களுக்கான குறுகிய கால திட்ட ஆய்வுப்பணிகள்:

இத்துறையின் பணிகளான, பிற கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வு மாதிரிகளை சோதனை (Testing of Samples) செய்ய வழிவகை செய்கிறது.


இதன் செயல்பாடுகள்

  • சோதனைக்கான மாதிரிகளின் விண்ணப்பங்கள் பெறுவது

  • விண்ணப்பங்களை சரிபார்த்து தக்க பகுப்பாய்வு பிரிவுகளுக்கு அனுப்பிவைத்தல்

  • ஆய்வின் முடிவுகளைப் பெற்று விண்ணப்பதாரருக்கு அனுப்பிவைத்தல் மற்றும்

  • அதற்கான தகுந்த பகுப்பாய்வுக் கட்டணங்களைப்பெற்று நிர்வாக அலுவலகத்திற்கு (நிதி பிரிவு) அனுப்பிவைத்தல்

போன்றவைகளாகும்.

மேலும் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு (எம்.எஸ்.சி, எம்.பில், எம்.இ, எம்.டெக்) மாணவர்களுக்கு வேதியியல், இயற்பியில், மீச்சிறு தொழில்நுட்ப அறிவியல், உயிரி தொழில் நுட்பவியல், பொருள் அறிவியல், கட்டுமானப் பொறியியல், வேதிப்பொறியியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் ஆகிய துறைகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்க மூன்று, ஆறு மற்றும் பன்னிரெண்டு மாத கால அளவில் திட்ட ஆய்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்தல்.

முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கான பகுதி திட்ட ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்கு இந்த பிரிவு தேவையான ஏற்பாடுகள் செய்துவருகிறது.

செய்தி மற்றும் விளம்பரம்

இப்பிரிவின் மற்றும்மொரு முக்கியப் பணியாக, இவ்வாய்வகத்தின் அறிவியல் கண்டுபிடிப்புகள், அறிவியல் விழாக்கள், செயல்பாடுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் பெருமளவு மக்களைச் சென்றடைவதற்கான ஒரு பாலமாக ஊடகங்களுக்கு செய்திகளை வழங்குவதில் பெரும் பங்காற்றிவருகிறது.

மேலும் இவ்வாய்வகத்தில் நடைபெறும் கருத்தரங்குகள், நிறுவன நாள் விழாக்கள், தொழில் நுட்ப தின விழா, அறிவியல் தின நிகழ்ச்சிகள், மாநாடு, அறிவியல் கருத்தரங்குகள், தொழில் நுட்ப பரிமாற்றங்கள், தொழில் நுட்ப செய்முறைகள், தொழில் முனைவோர்கள் சந்திப்பு, தொழில் நுட்பங்களை சந்தைப்படுத்துதல், மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் விருதுகள், பயற்சிகள் ஆகியவற்றை அச்சு ஊடகங்களுக்கும், காட்சி ஊடகங்களுக்கும் செய்தியாக அனுப்புதல் போன்றவை இந்தப் பிரிவின் பணிகளாகும்.

பிற பணிகள்

ஆய்வகத்தின் முக்கிய நிகழ்ச்சிகளான சிக்ரி நிறுவன நாள், சி.எஸ்.ஐ.ஆர். நிறுவன நாள், அறிவியல் தினம், தொழில் நுட்ப தினம், சிக்ரி பார்வையாளர்கள் தினம் போன்றவைகளை ஏற்பாடு செய்தல்.

பன்னாட்டு ஆய்வு இணைவாக்கத்திற்காக வெளிநாடுகளிலிருந்து (குறிப்பாக மூன்றாம் உலக நாடுகள்) வரும் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் வருகையைப் பதிவு செய்தல், அவர்களுடைய கடவுச் சீட்டு, அயல்நாட்டு நுழைவுச் சான்று (விசா) போன்றவைகளை கவனித்தல்.

இவ்வாய்வக விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான விருது தொடர்பான விண்ணப்பங்களைப் பெறுதல், அதற்கான உரிய ஒப்புதல் பெற்று தக்க அமைப்புகளுக்கு அனுப்பி வைத்தல் மற்றும் கடிதத் தொடர்பை மேற்கொள்ளுதல் போன்றவைகளாகும்.