சி.எஸ்.ஐ.ஆர் பற்றி


அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக்குழுமம் (CSIR) 1942ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் நாள் டெல்லியில் நிறுவப்பட்டது. இந்த தன்னாட்சி அமைப்பு இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் அமைச்சகத்தின் பங்களிப்புடன் நாட்டின் ஆய்வு மற்றும் தொழில் வளர்ச்சியில் ஒரு முன்மாதிரி அமைப்பாகத் திகழ்கிறது. மேலும் இந்தியாவின் மாண்புமிகு பிரதம மந்திரி அவர்கள் இந்த தன்னாட்சிக் குழுமத்தின் தலைவராவார். இந்த ஆய்வுக் குழுமம் நாடு முழுவதும் 38 தனித்துவம் வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களையும் 50 களப்பணி நிலையங்களையும் கொண்டுள்ளது. இதன் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளின் துறைகளாக விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering), கட்டமைப்புப் பொறியியல் (Structural Engineering), கடல் அறிவியல், மூலக்கூறு உயிரியல், உலோகவியல், வேதியியல், மின்வேதியியல், சுரங்கம், உணவு, பெட்ரோலியம், தோல், நுண்ணுயிரியல், மரபணு மற்றும் தொகுப்புயிரியல், நஞ்சாய்வு, புவியியற்பியல், உப்பு மற்றும் கடல் வேதியியல், இமாலயா உயிர்வளம், தாவரவியல் மற்றும் சுற்று சூழல் ஆகியனவற்றில் முதன்மை ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

உலகளவில் முதன்மையான அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக சி.எஸ்.ஐ.ஆர். நிறுவனமும் திகழ்ந்துவருகிறது. இதில் 17,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதில் நிபுணத்துவமும், அனுபவமும் வாய்ந்த சுமார் 4600 விஞ்ஞானிகள், 8000 தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள், 8000 ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோர் அறிவியல் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தனித்துவம் வாய்ந்த சி.எஸ்.ஐ.ஆரின் ஆய்வு நிறுவனங்களில் அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் தகுந்த மனிதவளங்கள் இருப்பதால் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சியில் தலைசிறந்து முன்மாதிரியாகத் திகழ்வதுடன் தேசியளவிலும், சர்வதேச அளவிலும் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

 

http://rdpp.csir.res.in/csir_acsir/Home.aspx